கூட்டணி வைப்பது; தோற்ற பிறகு விமர்சிப்பது - பா.ம.க-வுக்கு இதே வழக்கமாகிவிட்டது - புகழேந்தி காட்டம் : vimarsana.com

கூட்டணி வைப்பது; தோற்ற பிறகு விமர்சிப்பது - பா.ம.க-வுக்கு இதே வழக்கமாகிவிட்டது - புகழேந்தி காட்டம்


13 Jun 2021 8 PM
கூட்டணி வைப்பது; தோற்ற பிறகு விமர்சிப்பது - பா.ம.க-வுக்கு இதே வழக்கமாகிவிட்டது - புகழேந்தி காட்டம்
புகழேந்தி
ஒவ்வொரு தேர்தலின் போதும் கூட்டணி சேர்வதும், தேர்தலில் தோல்வி அடைந்து விட்டால் மற்றவர்களை விமர்சிப்பதுமே பா.ம.க-வின் வாடிக்கையாக உள்ளதென்று அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் புகழேந்தி காட்டமாக விமர்சித்திருக்கிறார்.
அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் புகழேந்தி சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க வெற்றி பெற்ற 6 தொகுதிகளில் மட்டும் தான் அந்த கட்சிக்குச் செல்வாக்கும், அதிகாரமும் இருக்கிறது. அப்படியிருக்கும் போது பா.ம.க இல்லையென்றால் அதிமுக 20 தொகுதிகளில் கூட வெற்றிபெற்றிருக்காது என்று பா.ம.க-வினர் கூறி வருவது முறையல்ல. பா.ம.க-வால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. அ.தி.மு.க வெற்றிபெற்ற தொகுதிகளில் பா.ம.க-வுக்கு எந்த விதமான வேலையும் இல்லை. அ.தி.மு.க தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தை தாங்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். ஆனால் பன்னீர்செல்வம் கையெழுத்துப் போட்டதால்தான் அன்புமணி இன்று ராஜ்யசபா எம்.பி-யாக இருக்கிறார். அப்படியிருக்கும் போது அன்புமணி தேவையற்ற கருத்துக்களைக் கூறிவருகிறார்.
அன்புமணி ராமதாஸ்
அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்ததால்தான் பா.ம.க சட்டசபைத் தேர்தலில் தோல்வியைத் தழுவி விட்டதாகச் சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது. பா.ம.க-வின் கோட்டையெனக் கருதப்பட்டு வந்த பல தொகுதிகளில் எல்லாம் முழுமையாக அ.தி.மு.க தோற்றுள்ளது. இப்படியிருக்கும் போது எங்கள் கட்சியின் தலைவர்களை அவர்கள் குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில் கூட்டணி சேர்வதும், தேர்தல் முடிவுக்குப் பின்னர் மற்றவர்களை விமர்சனம் செய்வதுமே பா.ம.க-வுக்கு வாடிக்கையாக இருந்து வருகிறது.
6 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ள பாமக முதலில் அதன் தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும்" என்று காட்டமாக தெரிவித்தார். புகழேந்தியின் பேச்சு பா.ம.க-வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Keywords

Rajya Sabha , Anbumani Ramadoss , Panneer Selvam , , Pukalenthi Madras , Tamilnadu , 2021 Election , Admk , Pmk , Pugazhendi , Anbumani , ராஜ்யா சபா , பன்னீர் செல்வம் , தமிழ்நாடு , பம்க் ,

© 2024 Vimarsana