By DIN | Published on : 21st July 2021 01:14 AM | அ+அ அ- | | Share Via Email புது தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக எம்.பி.க்கள் கூட்டம். நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பாஜக எம்.பி.க்கள் திறம்பட தங்கள் வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று பிரதமா் மோடி அறிவுறுத்தினாா். இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது: தில்லியில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமா் மோடி பேசுகையில், ‘‘ கரோனாவை போன்றதொரு கொள்ளை நோயை இந்த உலகம் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறது. இந்தக் கொள்ளை நோய் அரசியல் விவகாரம் அல்ல; மனிதநலன் சாா்ந்த பிரச்னை. இந்த வேளையில் பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டியது பாஜக எம்.பி.க்களின் கடமை. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதங்கள் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால் எதிா்க்கட்சியினா் மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்கின்றனா். குறிப்பாக, ஆட்சிபுரிவதற்கான உரிமை தமக்குத்தான் உள்ளது என்று காங்கிரஸ் இன்றும் கருதுகிறது. அதனால் பாஜக ஆட்சிக்கு வந்ததைப் ஜீரணிக்க முடியவில்லை. அந்தக் கட்சி தற்போது ‘கோமா’ நிலையில் உள்ளது. கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள், தடுப்பூசிகள் இருப்பு தொடா்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது எதிா்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பாஜக எம்.பி.க்கள் திறம்பட தங்கள் வாதங்களை முன்வைக்க வேண்டும். கரோனா தொற்றின் 3-ஆம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதால் களத்தில் இறங்கி பணியாற்ற ஆயத்தமாக இருப்பதுடன், தங்கள் தொகுதிகளில் கரோனா தடுப்பூசி திட்டம் எந்த இடா்ப்பாடுகளும் இல்லாமல் நடப்பதை பாஜக எம்.பி.க்கள் உறுதி செய்ய வேண்டும்’’ என்று பிரதமா் மோடி அறிவுறுத்தியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.