Tamil Nadu Class 11 adminissions: தமிழகத்தில் இன்று முதல் அதிக அளவிலான தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 21 வரை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளை மேற்கொள்ளலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளில் அறிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளின் படி, பள்ளிகள்,கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் (Anbil Mahesh), கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை இப்போது தொடங்கவில்லை என்று கூறினார். 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிழதழில் மதிப்பெண் இருக்காது, மாணவர் ஆல் பாஸ் என்று மட்டுமே இருக்கும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். தமிழகத்தில் (Tamil Nadu) உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் 6000-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடக்கின்றது. காலை முதல் அனைத்து உயர் நிலைப் பள்ளிகளிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் 11 ஆம் வகுப்பு கேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வருகிறார்கள். அனைத்து பள்ளிகளிலும் கொரோனா வழிகாட்டுதல்கள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டு மாணவர்சேர்க்கை நடந்து வருகிறது. தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது என அனைத்து வித கோவிட் நெறிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான மாற்றுச்சான்றிதழ் வழங்கல், இலவச பாடப்புத்தகங்கள் ஆகியவற்றுக்கான ஆணையையும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. முன்னதாக, இந்த ஆண்டிற்கான பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை குறித்து தீவிரமாக ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றும் இது குறித்து முதல்வரிடம் கலந்து பேசிய பிறகு முடிவு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார். கொரோனா பெருந்தொற்று காரணமாக 12 வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால், பல்வேறு படிப்புகளுக்கான கல்லூரி மாணவர் சேர்க்கை பற்றிய பெரிய குழப்பம் மாணவர்களிடையே நிலவி வருகிறது. கொரோனா தொற்று (Coronavirus) காரணமாக இந்த ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் முன்னரே ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து, பாலிடெக்னிக் தொழிநுட்ப கல்விக்கான மாணவர் சேர்க்கையிலும் குழப்பம் இருந்தது. தற்போது 9 ஆம் வகுப்பு ஆண்டு தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில் 11 ஆம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும். கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!