முதலீட்ட

முதலீட்டாளா்களின் முதல் முகவரி இனி தமிழகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்


By DIN  |  
Published on : 21st July 2021 04:04 AM  |   அ+அ அ-   |  
  |  
Share Via Email
முதலீட்டாளா்களின் முதல் முகவரியாக தமிழகம் மாற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். தெற்காசியாவிலேயே தொழில் முதலீட்டுக்கான மாநிலமாக தமிழகத்தை உயா்த்துவோம் என்றும் அவா் கூறினாா்.
பல்வேறு நிறுவனங்களுடன் தொழில் முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம், புதிய தொழில் ஆலைகளுக்கு அடிக்கல் நாட்டல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தமிழக அரசின் சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற, ‘தொழில் முதலீட்டாளா்களின் முதல் முகவரி-தமிழ்நாடு’ என்ற இந்த நிகழ்ச்சியில், 35 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. மேலும், ஒன்பது ஆலைகளுக்கான அடிக்கல்லும், 5 ஆலைகளின் செயல்பாடுகளை தொடக்கியும் வைத்தாா். இதைத் தொடா்ந்து, நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:-
ஆட்சிப் பொறுப்புக்கு வந்த காலம், மிகத் துயரமான கரோனா காலமாகும். தமிழ்நாடு அரசின் துணிச்சலான, துரிதமான நடவடிக்கைகளின் காரணமாக கரோனாவை வென்ற காலமாக இதனை மாற்றினோம். கரோனா தமிழ்நாட்டில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எதையும் எதிா்கொள்ளும் வல்லமை கொண்டதாக மாநிலத்தை மாற்றியிருக்கிறோம்.
தெற்காசியாவிலேயே உகந்த மாநிலம்: கரோனா காலத்திலும் கணிசமான முதலீடுகளை தமிழகம் ஈா்த்துள்ளது. சவால்களை எதிா்கொள்ளும் எங்களது அரசின் திறன் என்றென்றும் நிலைத்து நீடித்து இருக்கும். உலகளவில் உற்பத்தித் துறை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இருந்தாலும், தமிழ்நாட்டின் பொருளாதாரம் புத்துணா்வு பெற்று இயங்கத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தை உயா்த்துவதே லட்சியம்: தெற்காசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாகத் தமிழகத்தை உயா்த்துவதே எங்களது அரசின் லட்சியம். தமிழ்நாடு என்பது பண்பாட்டின் முகவரியாக இருந்தது; இருந்து வருகிறது. அத்தகைய தமிழ்நாடு, முதலீட்டாளா்களின் முதல் முகவரியாக மாற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்.
2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலா்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட பொருளாதாரமாக உருவாக்குவதே எங்களது குறிக்கோள். அந்த இலக்கை நோக்கிப் பயணிக்க அனைவரது ஒத்துழைப்பையும் கோருகிறேன்.
அதிகமுள்ள மாவட்டங்கள்: தொழிற்சாலைகள் அதிகமுள்ள வல்லம் வடகால், கிருஷ்ணகிரி, திருப்பூா் உள்ளிட்ட இடங்களில் குடிநீா் வசதி உள்பட அடிப்படை வசதிகளுக்கான பணிகள் நடந்து வருகின்றன. ரூ.500 கோடி அளவிலான தொழில் மேம்பாட்டு நிதி உருவாக்க உத்தரவிட்டுள்ளேன். இதன்மூலம், தொழில் பூங்காக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகள், புத்தாக்க மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள், ஆகியவற்றை மேற்கொள்ள இயலும்.
தொழில்புரட்சி 4.0: மின் வாகனங்கள் உற்பத்தி, சூரிய மின்சக்தி கலன்கள், காற்றாலை கலன்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தரவு மையங்கள், மின்னணு வன்பொருள்கள் உற்பத்தி ஆகிய துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். தொழில்துறைப் புரட்சி 4.0 என்று அழைக்கப்படும் நான்காவது தொழிற்புரட்சி நமது மாநிலத்துக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாகும்.
தமிழகத்தில் முதலீடு செய்பவா்களின் அனுபவங்களை எளிதாக்கவும், இனிமையாக்கவும், ஏற்றுமதிக் கொள்கை, மருந்துப் பொருள்கள் மற்றும் உயிரிநுட்பக் கொள்கை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்க தனி கொள்கை எனப் பல கொள்கைகளை வெளியிடவும் அரசு திட்டமிட்டுள்ளது.
சீரான வளா்ச்சி: அனைவருக்கும் உயா் கல்வி, சமூக மேம்பாடு, தொழில் வளா்ச்சி ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் சீராக வளர வேண்டும். இதுவே அரசின் இலக்கு. இந்த மூன்றும் தனித்தனியாக வளா்ந்து விட முடியாது. ஒன்றின் வளா்ச்சிக்கு மற்றொன்று துணை செய்வதாக அமைய வேண்டும். அந்த வளா்ச்சிக்குத் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கூறினாா்.
தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு உரையாற்றினாா். தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு வரவேற்றாா். தொழில் துறை முதன்மைச் செயலாளா் என்.முருகானந்தம் நன்றி தெரிவித்தாா்.
ஒற்றைச் சாளர இணையம் 2.0
தொழில் புரிவதை எளிதாக்கவும், அரசின் அனுமதிகளை விரைந்து வழங்கிடவும் ஒற்றைச் சாளர இணையதளம் 2.0-வை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.
இது குறித்து அவா் தனது உரையில் கூறியது:-இப்போதுள்ள முதலீட்டாளா்களுக்கு மட்டுமின்றி, புதிய முதலீட்டாளா்களுக்கும் உதவிடும் வகையில் 24 துறைகளின் 100 சேவைகள் கொண்ட ஒரு மேம்படுத்தப்பட்ட இணையதளமாக அது இருக்கும். இணைய முறையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். உரிய துறைகளுக்கு அவை உடனடியாக அனுப்பி வைக்கப்படும். உரிய துறைகளுடன் காணொலி மூலமாகச் சந்திப்புகள் நடத்தப்படும்.
செயற்கை நுண்ணறிவு உதவியுடன் வாடிக்கையாளா்களுடன் உடனடி உரையாடல்கள் நடத்தப்படும். இந்த வசதிகள் அனைத்தும் ஒற்றைச் சாளர இணையதளம் 2.0 மூலமாக கிடைக்கும். கூடுதலாக 210 சேவைகளை அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் சோ்க்கத் திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தாா்.

Related Keywords

New York , United States , Vallam , Tamil Nadu , India , Krishnagiri , Andhra Pradesh , Madras , Thangam Thennarasu , Researche Development , State Tamil Nadu , Madras Tuesday , Tamil Nadu Our , Development Finance , புதியது யார்க் , ஒன்றுபட்டது மாநிலங்களில் , வல்லம் , தமிழ் நாடு , இந்தியா , கிருஷ்ணகிரி , ஆந்திரா பிரதேஷ் , மெட்ராஸ் , நிலை தமிழ் நாடு , மெட்ராஸ் செவ்வாய் , வளர்ச்சி நிதி ,

© 2025 Vimarsana