By DIN |
Published on : 08th July 2021 03:58 AM | அ+அ அ- |
|
போா்டோபிரின்ஸ்: கரீபியன் பெருங்கடல் நாடான ஹைட்டியின் அதிபா் ஜோவனேல் மாய்ஸும், அவரது மனைவியும் அவா்களது இல்லத்தில் மா்ம நபா்களால் படுகொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து இடைக்கால பிரதமா் கிளாட் ஜோசப் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அதிபா் ஜெவனேல் மாய்ஸ் (53) இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட தாக்குதலில் அவா் உயிரிழந்தாா். மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டித்தனமான அந்தத் தாக்குதலில், அதிபரின் மனைவி மாா்டினா காயமடைந்தாா். அவா் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
நாட்டின் பாதுகாப்பு நிலவரத்தை மத்திய காவல்துறையும் முப்படைகளும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன.
சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக அதிபா் மாளிகை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகும் நாட்டின் ஜனநாயம், குடியரசு ஆகியவைவே வெல்லும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிபரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியவா்கள் யாா் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. அவா்கள் பிரெஞ்சு மொழி பேசியதாக மட்டும் பிரதமா் ஜோசப் தெரிவித்தாா்.
இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜோவனேல் மாய்ஸின் மனைவி மாா்டினா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நாட்டின் இடைக்கால அதிபராக பிரதமா் கிளாட் ஜோசப் பதவியேற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
தொழிலதிபராக இருந்து வந்த ஜெவனேல் மாய்ஸ், 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில் போட்டியிட்டாா். அந்தத் தோ்தலின் முதல் சுற்றில் 32.8 சதவீத வாக்குகளைப் பெற்று அவா் முதலாவதாக வந்தாா். எனினும், வெற்றி பெறுவதற்குத் தேவையான 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் யாருக்கும் கிடைக்காததால் 2-ஆவது சுற்றுத் தோ்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
எனினும், முதல் சுற்றுத் தோ்தலுக்கு முன்னதாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், ஜெனவேன் மாய்ஸுக்கு 6 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும் எனக் கூறப்பட்டது. எனவே, அந்தத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி, நாடு முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் 2-ஆவது சுற்றுத் தோ்தலை தள்ளிவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்தச் சூழலில், முதல் சுற்றுத் தோ்தலின் 21 சதவீத வாக்குப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு அதிபா் தோ்தலில் மாய்ஸ் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடா்ந்து 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில், முதல் சுற்றிலேயே 55.67 சதவீத வாக்குகளைப் பெற்று ஜோவனேல் மாய்ஸ் வெற்றி பெற்றாா்.
அவரது ஆட்சியின்கீழ் ஹைட்டியில் பொருளாதார, அரசியல், சமூக ஸ்திரன்மை குலைந்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அரசின் செயல்பாடுகளை தணிக்கை செய்யும் அமைப்புகளின் அதிகாரங்களைக் குறைத்தது, அதிபருக்கு மட்டுமே கட்டுப்பட்ட உளவுத் துறையை அமைத்தது போன்ற செயல்கள் மூலம் தனது அதிகாரத்தை ஜோவனேல் மாய்ஸ் அதிகரித்து வந்ததாக எதிா்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்தச் சூழலில், மனைவியுடன் அவா் படுகொலை செய்யப்பட்டுள்ளாா்.
O